அம்மாவின் ஆசை
அப்பா இறந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. அம்மாவை என் வீட்டிற்கு வரச்சொன்னால் “பெண்ணின் வீட்டிற்கு வந்து எப்படி இருப்பது?” என்று மறுத்துவிட்டாள்.
இரண்டு பெண்களை பெற்றுவிட்டு என் தாய் வீட்டில் தனியாக இருக்கிறாள் என்பது என் மனதுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எங்கள் வீட்டில் நானும் என் தங்கையும் தான். என் தங்கை அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே இருக்கிறாள். நான் இங்கே ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறேன். குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று. அவர் வங்கியில் பணிபுரிகிறார்.
“இவ்வளவு வயதாகியும் நான் சொந்தமாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க வில்லை”
வாரத்திற்கு ஒரு முறை அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் செல்வேன். அப்பா இருந்தவரை அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டார். அப்பா இல்லாதது அம்மாவிற்கு நிச்சயம் பெரிய இழப்புதான். உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளாக அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். அவர் பட்ட கஷ்டங்களில் இருந்து மரணம் அவரை விடுவித்ததாகவே எங்கள் அனைவருக்கும் தோன்றியது.
இன்று எனக்கு வார விடுமுறை, அம்மா வீட்டிற்கு செல்கிறோம். காலை சிற்றுண்டி முடித்த உடனே கிளம்பிவிட்டோம். அம்மா வீட்டிற்கு சென்றவுடன் குழந்தைகள் எப்போதும் போல் எதிர்வீட்டு குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டனர். அம்மா என் பக்கத்தில் உட்கார்ந்து மிகவும் தயங்கி “எனக்கு 65 வயது சென்ற மாதமே முடிந்துவிட்டது. ஆனால் இவ்வளவு வயதாகியும் நான் சொந்தமாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை!” என்று கூறினார்.
எனக்கு ஒரே ஆச்சரியம். கூடவே அதிர்ச்சியும்… இத்தனை வருடங்கள் கழித்து அம்மாவிற்கு ஏன் இப்படி ஒரு எண்ணம்? என்று தோன்றியது. சிறிது நேரம் மௌனமாக யோசித்தேன். உடனே பதில் ஏதும் தோன்றவில்லை. “அம்மா, நான் யோசித்து விட்டு நாளை சொல்கிறேன்” என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்தவுடன் அவரிடம் சொன்னால் “உன் அம்மா என்ன செய்ய முடியும் இந்த வயதுக்கு மேல்?” என்று கேட்டுவிட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற யோசனை என்னுள் சுழன்று கொண்டே இருந்தது. அப்படியே யோசித்துக்கொண்டே எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் காலை சமைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு பொறி தட்டியது. அம்மாவிற்கு போன் செய்து “அம்மா, இன்னைக்கு நீ செய்யும் சோமாசா, முறுக்கு, தேங்காய் பர்ஃபி எல்லாம் ஒரு இருபது என்ற எண்ணிக்கையில் செய்து வைத்து செய்து வைத்து விடுமா. நான் மாலையில் வீட்டிற்கு வருகிறேன்” என்றேன். அம்மா ஏதும் கேட்காமல் “சரி பண்ணிடுறேன்” என்றாள்.
மாலை சென்று பலகாரங்களை வாங்கி என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு சுவைப்பதற்காக கொடுத்தேன். “இவ்வளவு சுவையா யார் செய்தார்?” என்றனர் சிலர். “என் அம்மா செய்தது போலவே இருக்கிறது என்றனர்” சிலர். என் அம்மாதான் செய்தார் என்றேன் பெருமையுடன். ஆனால் யாருமே ஆர்டர் கொடுக்கவில்லை.
நான் மனம் தளரவில்லை. எனக்கு தெரிந்த உறவினர்கள், பேக்கரி, பழமுதிர் நிலையம், ஸ்வீட் கடை என்று எல்லா பக்கமும் அலைந்தேன். என் படிப்பு தந்த அனுபவத்தை விட அது எனக்கு இன்னும் சில அனுபவங்களை தந்தது. இப்படியாக ஒரு மாதம் தேடியதன் விளைவாக ஒரு பேக்கரியில் அம்மாவின் கைமணம் பிடித்து ஆர்டர் கொடுத்தனர். அம்மா தனியாக செய்து கஷ்டப்படக்கூடாது என்று நினைத்த நான் அம்மாவிற்கு உதவிக்காக ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்து விட்டேன்.
இப்போது அம்மாவிற்கு ஆர்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அம்மாவிற்கு ஒரே மகிழ்ச்சி! இத்தனை வருடங்களாக என் அம்மாவை நான் இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்ததே இல்லை. அவளுடைய அந்த சந்தோஷம், அவளுடைய வயதுக்கு மீறிய சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் கொடுத்து விட்டது எங்கள் எல்லோராலும் உணர முடிந்தது.
நம் பெற்றோரும் நம் குழந்தைகள் போல தான், அவர்களுக்கும் நாம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது, அம்மாவிற்காக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, அவள் சமையலையும், அவளின் முகத்தையும் பலருக்கு அடையாளம் காணச்செய்தேன். என் அம்மாவிற்கு ஃபேஸ்புக், இன்ஸ்டகிரம் அக்கவுண்ட் கூட ஆரம்பித்து எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக்கொடுத்தேன். எல்லாவற்றையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு, ஆனால் இஷ்டப்பட்டு கற்றுக்கொண்டாள்.
"65 வயதில் என் அம்மா எனக்கு ஒரு ரோல்மாடலாக ஆகிவிட்டாள்"
என் மாணவர்களுக்கு என் அம்மாவின் கதையை சொன்னேன். “உங்கள் கனவுகளை நிறைவேற்ற வயதோ, படிப்போ ஒரு தடையில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே உங்களுக்கு வேண்டும். அது உங்களை வழிநடத்திச் செல்லும்." என்று கூறினேன். 65 வயதில் என் அம்மா எனக்கு ஒரு ரோல்மாடலாக ஆகிவிட்டாள் என்றும் கூட கூறினேன், பெருமையுடன்.
Comments
Post a Comment